தமிழ்நாட்டில் நாளை ஓட்டுப்பதிவு நடை பெறுகிறது.வாக்காளர்கள் “பூத்சிலிப்”பை கொண்டு சென்று ஓட்டுப் போட வேண்டும். பூத்சிலிப் இல்லை யென்றால் வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு சென்று ஓட்டு போடலாம். வாக்காளர் பட்டியலிலோ, பூத்சிலிப்பிலோ புகைப்படம் இல்லை யென்றாலும் 13 விதமான ஆவணங்களில் ஒன்றை கொண்டு சென்று ஓட்டுப் போடலாம்.சமீபத்தில் வழங்கப்பட்ட பூத்சிலிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. பெயர்கள், புகைப்படங்கள், விலாசம், வீட்டு எண் மாறி உள்ளன. ஆண்கள் படத்தில் பெண்கள் பெயரும், பெண்கள் படம் உள்ள சிலிப்களில் ஆண்கள் பெயரும், வயது வித்தியாசங்களும் உள்ளன.
“பூத்சிலிப்” மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் புகைப்படத்துடன் கூடிய வேறு ஆவணங்களை காட்டி ஓட்டு போடலாம் என்று தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இப்போது, பூத்சிலிப்பில் குளறுபடிகள் இருந்தாலும் 13 அடையாள ஆவணங்களில் ஒன்றை வாக்குச்சாவடிக்கு கொண்டு சென்று ஓட்டுப்போடலாம் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
பூத்சிலிப், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளில் தவறு அல்லது பொருந்தா புகைப்படம் இடம் பெற்று இருந்தாலும், இந்திய தேர்தல் கமிஷன் அனுமதித்து உள்ள மாற்று ஆவணங்களை கொண்டு சென்று ஓட்டுப்போடலாம். இவர்கள் மாற்று ஆவணத்துடன் தனக்கு தவறான விவரங்களுடன் வழங்கப்பட்டுள்ள பூத்சிலிப் அல்லது வாக்காளர் அடையாள அட்டையையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
ஓட்டுப்போடுவோர் பூத்சிலிப், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுக்குப் பதிலாக கொண்டு செல்ல வேண்டிய 13 ஆவணங்கள் விவரம் வருமாறு:-
1.பாஸ் போர்ட், 2.டிரைவிங் லைசென்சு, 3.பான்கார்டு, 4.மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை, 5.வங்கி மற்றும் அஞ்சல் துறையால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை, 6.முதியோர், ஓய்வூதியம் பெறுவோர், விதவைகள் சான்றிதழ் மற்றும் ஆணை. 7.புகைப்படத்துடன் கூடிய சுதந்திர போராட்ட வீரர் அட்டை, 8.புகைப் படத்துடன் கூடிய பட்டா-சொத்து ஆவணங்கள். 9.தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டோருக்கான புகைப்பட சான்றிதழ். 10.புகைப் படத்துடன் வழங்கப்பட்ட ஆயுத உரிமம். 11.மாற்று திறனாளிகளின் புகைப்பட சான்றிதழ், 12.புகைப் படத்துடன் கூடிய தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட அடையாள அட்டை, 13.மத்திய தொழிலாளர்துறையால் வழங்கப்பட்ட புகைப்பட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு.