ஊத்துக்கோட்டை: ""குரங்கு, மரம் விட்டு மரம் தாவுவது போல, ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணியை மாற்றிக்கொண்டே இருக்கிறது பா.ம.க.,'' என, ஊத்துக்கோட்டை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சி.எச்.சேகரை ஆதரித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது: பா.ம.க.,வினர், 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி நாசமாக்கிவிட்டு, இப்போது பசுமைத் தாயகம் என்ற பெயரில் அமைப்பு துவங்கி, மரம் நடச் சொல்கின்றனர். "மதுவை ஒழிப்போம், டாஸ்மாக் கடைகளை விரட்டுவோம்' என, கொள்கை வீராப்புடன் முழங்கியவர்கள், இன்று, டாஸ்மாக் கடைகளை நடத்தும் தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளனர்.
குரங்கு, மரம் விட்டு மரம் தாவுவது போல, ஒவ்வொரு தேர்தலிலும் பா.ம.க., கூட்டணியை மாற்றிக்கொண்டே இருக்கிறது. மொத்தத்தில் தி.மு.க., கூட்டணி கொள்ளைக் கூட்டணி. நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி, கொள்கைக் கூட்டணி. தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்ற பிரச்னைகளால் பொதுமக்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர். ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு கொடுத்துவிட்டு, அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் கைக்கு எட்டாத அளவுக்கு விலையை உயர்த்தி விட்டனர். பெட்ரோல், டீசல் விலையால் சராசரி மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்கள் செல்வகணபதி, இந்திரகுமாரி, சேடப்பட்டி முத்தையா போன்றவர்கள் இப்போது தி.மு.க.,வுக்கு தாவிவிட்டனர். கட்சி மாறியவுடன் அவர்கள் மீதான ஊழல் வழக்குகள் எல்லாம் வாபஸ் வாங்கப்பட்டு விட்டன. அப்படியென்றால், அவர்கள் எல்லாம் ஊழல் செய்யவில்லையா? எப்படியும் மக்களை ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணம் கொண்ட பா.ம.க.,வினர், கும்மிடிப்பூண்டியில் வேட்பாளரை நிறுத்தியுள்ளனர். அ.தி.மு.க., கூட்டணி, "வெண்டிலேட்டர்' கூட்டணி என அழகிரி தெரிவித்தார். எங்களுடையது, "எக்ஸ்சிலேட்டர்' கூட்டணி என்பது மக்களுக்கு தெரியும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.