விழுப்புரம் : ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் வாசுதேவனிடம் மதியம் 1.11 மணிக்கு மனு தாக்கல் செய்தார். அவரது மனைவி பிரேமலதா மற்றும் தேமுதிக நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கண்ணில் படும் தொகுதிகள் எல்லாவற்றுக்கும் போய் பிரசாரம் செய்கிறேன். அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. திருவாரூரில் வடிவேலு பேசியதை பற்றியெல்லாம் நான் யோசிப்பதில்லை. ஜெயலலிதாவுடன் இணைந்து பிரசாரம் செய்வது பற்றிய எந்த திட்டமும் முடிவு செய்யப்படவில்லை. நடக்குமா நடக்காதா என்று எனக்கு ஜோசியம் சொல்ல தெரியாது.
என்ன நடக்கணுமோ அதுதான் நடக்கும். கார்கில் போரில் பாகிஸ்தானை வீழ்த்த வியூகம் அமைக்கப்பட்டது. அதை வெளியே சொல்லமாட்டார்கள். அதுபோலதான் தேர்தலும். எல்லாத்தையும் வெளியே சொல்ல முடியாது. இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.