இந்த தேர்தலில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில் தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, சமக ஆகியவை இடம் பெற்றுள்ளன. பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2011 : கருணாநிதி, ஜெயலலிதா உட்பட கட்சி தலைவர்கள் வாக்களித்தனர்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் கருணாநிதி இன்று காலை வாக்களித்தார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரும் இன்று சென்னையில் வாக்களித்தனர். ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் ஜெயலலிதா, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தார். அதேபோல கொளத்தூரில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள பள்ளியில் வாக்களித்தார். ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சாலிகிராமம் காவேரி மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார். அவருடன் மனைவி பிரேமலதாவும் சென்று வாக்களித்தார். மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடி, சிட்டலாச்சி கிராமத்தில் வாக்களித்தார். அமைச்சர் அன்பழகன்அண்ணாநகர் பள்ளியில் வாக்களித்தார். முதல்வர் கருணாநிதி ஒன்பதரை மணியளவில் வாக்களித்தார். கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளிக்கு வந்த அவர் அங்கு தனது வாக்கைச் செலுத்தினார். அவருடன் மனைவி தயாளு அம்மாளும் வாக்களித்தார். மேற்கண்ட தலைவர்கள் அனைவருக்கும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பந்தல் அமைப்பு
வாக்காளர்கள் வெயிலில் பாதிக்காமல் இருக்க அனைத்து வாக்குசாவடிகளிலும் பந்தல் போடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வாக்காளர்களுக்காக குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடியும் நேரமான மாலை 5 மணிக்கு மேல் வாக்காளர்கள் கியூ அதிகமாக இருந்தால், அனைத்து வாக்காளர்களுக்கும் டோக்கன் வழங்கப்படும். அதன் பின்னர் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த டோக்கன் கடைசியில் நிற்பவரிடம் இருந்து வழங்கப்படும் என்றும், அதன் பின்னர் ஓட்டு போட யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று த தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.
2 மணி நேரத்துக்கு ஒரு முறை எஸ்எம்எஸ்
ஒவ்வொரு வாக்குசாவடிகளிலும் பதிவாகும் வாக்குகள் குறித்து 2 மணி நேரத்திற்கு ஒரு முறை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை 10, 12, மதியம் 2, 4 மணிகளில் தகவல் தெரியும். கள்ள ஓட்டு போடுவதை தடுக்கும் வகையில் மதியம் 3 மணிக்கு மேல் வாக்குசாவடிகளில் பணியாற்றும் ஊழியர்கள் யாரும் வெளியே செல்ல கூடாது என்றும் அதிரடி உத்தரவு போடப்பட்டுள்ளது.