அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

14 ஏப்., 2011

91 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: ஓட்டு எந்திரங்களுக்கு ராணுவ பாதுகாப்பு; கட்சி ஏஜெண்டுகள் இரவு-பகலாக கண்காணிப்பு


91 மையங்களில் வாக்கு எண்ணிக்கை:
 
 ஓட்டு எந்திரங்களுக்கு
 
 ராணுவ பாதுகாப்பு;
 
 கட்சி ஏஜெண்டுகள் இரவு-பகலாக கண்காணிப்பு
தமிழக சட்டசபைக்கு நேற்று நடந்த தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கட்சி ஏஜெண்டுகளின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.   தமிழ்நாடு முழுவதும் 91 மையங்களில் அடுத்த மாதம் (மே) 13-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 234 தொகுதி ஓட்டுக்கள் இந்த 91 மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. அங்கு மின்னணு எந்திரங்கள் அறைகளில் வைத்து, அந்த அறைகள் “சீல்” வைக்கப்பட்டன. அந்த அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
 
ஓட்டுப்பதிவு எந்திரங்கள் உள்ள அறை வாசல் முன்பு ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தி காவலுக்கு நிற்பார்கள். அவர்களை தொடர்ந்து சிறப்புப்படை போலீசார் அரண் போல நிற்பார்கள். இதையடுத்து உள்ளூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.   ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் இரவு-பகலாக சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று டிஜிபி போலோநாத் கூறினார்.
 
ஓட்டுப்பதிவு எந்திரங்கள் உள்ள கல்லூரிகளில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு பாதுகாப்பு அறை உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி 91 வாக்கு எண்ணும் மையங்களில் 234 பாதுகாப்பு அறைகள் ஏற் படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த அறைகளை சுற்றி யாரும் அத்துமீறி நுழைந்து விடக்கூடாது என்பதற்காக தானியங்கி ரகசிய கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பகல் போல காட்சி அளிக்க செய்யும் வகையில் ஒளி வெள்ள விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. இவை தவிர மின்னணு எந்திரங்கள் அறையை 24 மணி நேரமும் படம் பிடித்து இணைய தளத்தில் ஒளி பரப்பு செய்ய வெப்- காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
 
இதன் மூலம் 91 வாக்கு எண்ணிக்கை மையங்களையும் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.   வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஒவ்வொன்றிலும் தலா ஒரு டி.எஸ்.பி., ஒரு துணை ராணுவ அதிகாரி, தாசில்தார் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 2 ஏட்டு உள்பட 14 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 91 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 3 கம்பெனி துணை நிலை ராணுவத்தினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியை செய்வார்கள்.
 
மின்னணு எந்திரங்கள் உள்ள பகுதிகளைச் சுற்றி இருக்கும் சாலைகளில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையும் கண்காணிப்பும் நடந்து வருகிறது. இவர்கள் தவிர அரசியல் கட்சி பிரமுகர் களின் ஏஜெண்டுகளும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைகள் அருகே காவலுக்கு உள்ளனர்.   சென்னை மாவட்டத்தில் மொத்தம் 16 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதி களின் வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி 3 இடங்களில் எண்ணப்படும். அண்ணா பல்கலைக் கழகத்தில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும்.
 
ராணிமேரி கல்லூரியில் ராதாகிருஷ்ணன் நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக் கேணி ஆகிய 4 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. லயோலா கல்லூரியில் பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க. நகர், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய 7 தொகுதிகளின் ஓட்டுக்கள் எண்ணப்படும். சோழிங்கநல்லூர் தொகுதி ஓட்டு சோழிங்கநல்லூரில் உள்ள முகம்மது சதக் கல்லூரியில் எண்ணப்படும். இந்த 4 மையங்களிலும் 255 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.
free counters