அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

14 ஏப்., 2011

அடுத்த முதல்வர் யார்?- கணிப்பது கஷ்டம்: ரஜினி

Rajinikanthசென்னை: நாடு முழுவதும் விலைவாசி உயர்வால் ஏழைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழகத்தில் அடுத்து யார் முதல்வராக வந்தாலும் அதை முதலில் தீர்க்க வேண்டும் என்று நடிகர் ரஜினி கூறினார்.


இந்த தேர்தலில் ரஜினிகாந்த்தின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு பலமாகவே இருந்தது. இருப்பினும் அவர் வெளிப்படையாக எதையும் பேசவில்லை. இருப்பினும் அவரை திமுக வேட்பாளர்கள் அடுத்தடுத்து சந்தித்து ஆசி பெற்றனர். அதிமுக சார்பில் சைதை துரைசாமியும் சந்தித்துப் பேசினார். அதேபோல பாஜக தலைவர் நிதின் கத்காரியும் போய்ப் பார்த்தார்.

இந்த நிலையில் இன்று காலை ரஜினிகாந்த் தனது வாக்கைப் பதிவு செய்தார். 

காலை 10.45 மணிக்கு சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச் சாவடிக்கு காரில் வந்தார். அந்த கல்லூரி வளாகத்தில் வேறு, வேறு இடங்களில் 3 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 167, 168, 169 ஆகிய எண் கொண்ட அந்த மூன்று வாக்குச் சாவடிகளும் பொது வாக்குச் சாவடிகளாகும். நடிகர் ரஜினி வாக்களிக்க வேண்டிய ஓட்டுச்சாவடி 169வது எண் ஓட்டுச்சாவடி யாகும். இது ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி போர்டிகோ பகுதியில் இருந்தது.

அலைக்கழிப்பு...

ரஜினியின் காரும் மிகச்சரியாக அந்த வாக்குச்சாவடி அருகில் வந்து நின்றது. கருப்பு பேண்ட், ப்ளு கலர் சட்டை, கூலிங் கிளாஸ் அணிந்து வந்திருந்த ரஜினி அந்த ஓட்டுச் சாவடிக்குள் செல்ல முயன்றபோது திடீரென அவரை, அவருடன் வந்தவர்கள் வேறு பகுதிக்கு அழைத்துச் சென்று விட்டனர்.

கல்லூரிக்குள் நுழைந்து விட்ட ரஜினி அங்கு ஓட்டுச் சாவடி இல்லாததால் திரும்பினார். இதையடுத்து அவரை 167-வது ஓட்டுச் சாவடிக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள், உங்கள் பெயர் 169-வது வாக்குச்சாவடியில் உள்ளது. அது எதிர்புறம் உள்ளது. அங்கு செல்லுங்கள் என்றனர்.

இதையடுத்து ரஜினி அங்கிருந்து நடந்தே 169-வது வாக்குச் சாவடிக்கு வந்தார். அலைக்கழிக்கப்பட்ட அவர் விறுவிறுவென உள்ளே சென்றார். ரஜினி ஓட்டுப் போடுவதை படம் பிடிக்க தொலைக் காட்சி, பத்திரிகை போட்டோகிராபர்கள் நூற்றுக்கும் மேல் திரண்டிருந்தனர். இதனால் ரஜினி சற்று சிரமத்துக்குள்ளானார்.

வாக்களித்த கையோடு மின்னல் வேகத்தில் அவர் புறப்பட, அவரிடம் தேர்தல் தொடர்பாக கருத்து கேட்க நிருபர்கள் பின் தொடர்ந்தனர். ஆனால் ரஜினி நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

ரஜினி வீட்டுக்கு சென்று சேர்ந்ததும் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக் காட்சிக்கு பேட்டி அளித்தார்.

தேர்தலில் எதை மையமாக கருதுகிறீர்கள் என்று நிருபர் கேட்டதற்கு ரஜினி கூறியதாவது:

தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் பல பிரச்சனைகள் உள்ளன. அதில் மிகப் பெரியது, முக்கியமானது விலைவாசி உயர்வு. இதனால் ஏழைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழகத்தில் அடுத்து யார் முதல்வராக வந்தாலும் அதை முதலில் தீர்க்க வேண்டும். அடுத்த முதல்வராக யார் வந்தாலும், அவர் ஏழைகள் நலனைக் காக்கும், விவசாயிகள் நலன் காக்கும் முதல்வராக இருக்க வேண்டும்.

பொதுவாக நிலையான அரசும், மக்கள் நல அரசும் அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தத் தேர்தல் மிகக் கடுமையான போட்டியைக் கண்டுள்ளது. யார் வருவார்கள் என்பதை கணிப்பது கஷ்டமாகத்தான் உள்ளது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.

அன்னா ஹஸாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டம் குறித்துக் கேட்டபோது,

"அன்னா ஹஸாரே ஊழலுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். அவருடன் இணைந்து செயல்பட நான் ஆசைப்படுகிறேன்," என்றார்.

அரசியலில் உங்கள் பங்களிப்பு இனி வரும் காலங்களில் பெரிதாக இருக்குமா?

அது பற்றி வேணாம்... இப்போது அதுபற்றி பேசவும் விரும்பவில்லை. பார்க்கலாம்.

ஊழலுக்கு எதிராக நீங்கள் இயக்கம் எதுவும் ஆரம்பிப்பீர்களா?

அதான் அன்னா ஹஸாரே ஆரம்பித்துள்ளாரே... அதுவே போதும். அதில் நானும் இருப்பேன்.

யார் அடுத்த முதல்வராக வருவார்கள்?

அதை சொல்வது கஷ்டம், என்றார்.

ஆழ்வார்ப்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடிகர் கமல்ஹாசன் ஓட்டுப் போட்டார்.

அஜீத், சூர்யா ஓட்டுப் போட்டனர்

நடிகர் சிவக்குமார் தனது மனைவி, மகள் பிருந்தா, மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோருடன் தி.நகர் இந்தி பிரச்சார சபாவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் ஓட்டுப் போட்டார்.

நடிகர் அஜீத் திருவான்மியூர் மாநகராட்சி பள்ளியில் வரிசையில் நின்று ஓட்டு போட்டார்.

நடிகர்கள் விஷால், ஆர்யா ஆகியோர் அண்ணா நகரில் உள்ள வள்ளிம்மாள் பள்ளியில் வாக்களித்தனர்.

கவிஞர் வைரமுத்து டிரஸ்ட்புரத்தில் உள்ள சென்னைப் பள்ளியிலும், நடிகை குஷ்புவும், அவரது கணவர் சுந்தர்.சியும் சாந்தோமில் உள்ள பள்ளியில் ஓட்டுப் போட்டனர்.

ஓட்டுப் போட்ட பின்னர் சூர்யா செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைவரும் மகிழ்ச்சியுடன் வாக்களித்து வருகின்றனர். மனசாட்சிப்படி அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்றார்.
free counters