அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

25 ஜூன், 2011

பாகிஸ்தானுக்கு எஸ்.எம். கிருஷ்ணா நன்றி


கடற்கொள்ளையரிடமிருந்து மீட்கப்பட்டு தில்லிக்கு விமானம் மூலம் வெள்ளிக்கிழமை வந்த மாலுமிகளை வரவேற்கும் உறவினர்கள். (இடமிருந்து) என்.கே. சர்மா, பிரசாந்த்
புது தில்லி, ஜூன் 24: சோமாலிய கடற்கொள்ளையர்களால் பிடித்து வைக்கப்பட்ட இந்திய மாலுமிகளை மீட்பதில் பாகிஸ்தான் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. உரிய நேரத்தில் பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகவும் பாராட்டுக்குரியது, இந்தியர்களைக் காப்பாற்றியதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா குறிப்பிட்டார்.
22 பேரடங்கிய எம் வி சூயஸ் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் 10 மாதங்களுக்கு முன்பு கடத்திச் சென்றனர். இவர்களை மீட்பதில் பாகிஸ்தான் மனித உரிமை அமைப்பு மிக முக்கிய பங்காற்றியது. கொள்ளையர்கள் விடுவித்த பிறகு இவர்களை மீட்டு கராச்சிக்கு அழைத்து வருவதில் பாகிஸ்தான் கடற்படை மிக முக்கிய பங்காற்றியது. இவர்கள் அனைவரும் கடற்படையின் பாதுகாப்போடு வியாழக்கிழமை கராச்சிக்கு அழைத்துவரப்பட்டனர். அங்கிருந்து துபை வழியாக இவர்கள் நாடு திரும்பினர். இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பியது மிகுந்த நிம்மதியை அளிப்பதாகக் குறிப்பிட்ட கிருஷ்ணா, உரிய சமயத்தில் பாகிஸ்தான் அரசு மிகச் சிறந்த உதவியை செய்துள்ளது என்று குறிப்பிட்டார். இந்தியர்கள் உள்ளிட்ட 22 பேர் மீட்கப்பட்டபோதிலும் இன்னமும் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் 500-க்கும் அதிகமானோர் பிணைக் கைதிகளாக உள்ளனர். இவர்களை மீட்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்று கிருஷ்ணா குறிப்பிட்டார். எம்.வி. சூயஸ் கப்பலில் இருந்த 6 இந்தியர்கள், 11 எகிப்தியர்கள், 4 பாகிஸ்தானியர்கள், ஒரு இலங்கையைச் சேர்ந்தவர் உள்ளிட்டோர் மீட்கப்பட்டனர். இவர்களை மீட்க 20 லட்சம் டாலர் பிணைத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.
தில்லி திரும்பினர்: 10 மாதங்களாக கடற்கொள்ளையரின் பிடியில் சிக்கி மிகுந்த சிரமத்துக்குள்ளான இந்திய மாலுமிகள் வெள்ளிக்கிழமை காலை தில்லி திரும்பினர். இவர்களை வரவேற்க அவர்களின் குடும்பத்தினர் விமான நிலையத்தில் குழுமியிருந்தனர். மாலுமிகளின் குழந்தைகள் அன்சார் பர்னி மாமாவுக்கு நன்றி, நாங்கள் உங்களை நேசிக்கிறோம் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தியிருந்தனர். மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த அன்சார் பர்னி என்பவர்தான் சோமாலிய கடற்கொள்ளையரிடமிருந்து மீட்கும் பணியில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு திரும்பிய மாலுமிகளை வரவேற்க இந்திய அரசு சார்பில் எவரும் விமான நிலையத்துக்கு வரவில்லை.
தாங்கள் விடுதலையாவதில் இந்திய, பாகிஸ்தானிய ஊடகங்கள் பெரிதும் உதவியதாக விடுதலையானவர்களில் ஒருவரான ரோஹ்தக் பகுதியைச் சேர்ந்த ரவீந்தர் சிங் பூலியா தெரிவித்தார். தங்களை விடுவிப்பதில் இந்திய அரசின் பங்கு குறித்து தான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டார். ஆனால் அவரது மனைவி சம்பாவின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக உருண்டோடியது. இதனால் ஏற்பட்ட வலி என்றென்றும் நீங்காது என்று குறிப்பிட்டார்.
இத்தகைய மகிழ்ச்சியான தருணங்களுக்காக 10 மாதங்கள் காத்திருந்ததாக மற்றொரு மாலுமி பிரசாந்த் செüகான் குறிப்பிட்டார்.
எம்.வி. சூயஸ் கப்பலில் மீட்கப்பட்ட 22 பேரும் ஓமான் கடற்பகுதியிலிருந்து பாகிஸ்தானின் கடற்படை கப்பல் பிஎன்எஸ் ஜுல்பிகர் மூலம் கராச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். எம்வி சூயஸ்  கப்பல் எரிபொருள்தீர்ந்து போனதால் ஓமான் கடற்பகுதியில் நின்று போனது.
தங்களை மீட்பதில் பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என்று மற்றொரு மாலுமி என்.கே. சர்மா குறிப்பிட்டார். மீட்பு விஷயத்தில் இந்திய அரசு என்ன செய்தது என்றே தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தான் அரசு தங்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தியதாக அவர் குறிப்பிட்டார். கடற்கொள்ளையர் பிடியில் இருந்தபோது, பெரும்பாலான நாள்களை பட்டினியில் கழித்ததாகக் குறிப்பிட்ட அவர், சில நாள்கள் வெறும் தண்ணீர்தான் தங்களுக்கு ஆகாரமாக இருந்துள்ளது என்று குறிப்பிட்டார்.  சில சமயங்களில் அரிசி சாதமும், வேகவைத்த உருளைக் கிழங்கும்தான் கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.
மீட்கப்பட்ட மாலுமிகளின் குடும்பத்தினர் அனைவருமே அன்சார் பர்னிக்கு தாங்கள் மிகுந்த கடமைப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். அதேசமயம் இவர்களை மீட்பதில் இந்திய அரசு ஏதும் செய்யவில்லை என்ற ஆத்திரம் அவர்களது பேச்சில் தெரிந்தது.
அன்சார் பர்னிக்கு தான் மிகுந்த நன்றிக் கடன் பட்டிருப்பதாக சுரீந்தர் கெüர் குறிப்பிட்டார். இவர் மாலுமி சத்நாம் சிங்கின் தாயார்.
தனது தந்தை வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக என்.கே. சர்மாவின் 6 வயது மகள் நந்திதா குறிப்பிட்டார்.
தனது கணவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தில்லியில் ராகுல் காந்தி வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர் சம்பா. இந்த விஷயத்தில் இந்திய அரசு தலையிட வேண்டும் என்ற அவரது கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது. அத்துடன் இதில் மத்திய அரசு செய்வதற்கு ஒன்றுமில்லை என்று கைவிரித்துவிட்டது. ஆனால் பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்களால் இது சாத்தியமாகியுள்ளது எப்படி என்று சம்பா கேள்வியெழுப்பினார். பொதுவாக பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக சித்தரிக்கும் நிலையில் அவர்கள் எங்களது குடும்பத் தலைவனை மீட்டுத் தந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
மீட்கப்பட்ட ஆறு இந்திய மாலுமிகள் விவரம்: என்.கே. சர்மா (ஜம்மு), ரவீந்தர் சிங் பூலியா (ரோஹ்தக்), சச்சின் (மும்பை), சத்நாம் சிங் (அம்பாலா), பிரசாந்த் செüகான், பிஜு (சிம்லா).
நன்றி ; தினமணி
free counters