மகாராஷ்டிரா மாநிலம் மாலேகான் மாவட்ட உதவி கலெக்டர் யஷ்வந்த் சோனேவான், எரிபொருள் கடத்தல் கும்பலால் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, மகாராஷ்டிரா நிர்வாகம், அதிரடி சோதனைக்கு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா போலீசார் தீவிரப்படுத்தியுள்ள அதிரடி சோதனையால், பல முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. எரிபொருள் கடத்தல் கும்பல், எவ்வாறு இந்த செயலை மேற்கொள்கிறது. நூதன முறையில் கடத்தல் செய்வது எப்படி உள்ளிட்ட ரகசிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி, இந்த கடத்தல் செயல்களில் பெரும்பாலும் தனியார் எண்ணெய் நிறுவன வாகனங்களே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு வாகனத்தில், 12 கிலோ லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பப்படும். இந்த வாகனம், தலா, 4 கிலோ கொள்ளளவு கொண்ட 3 பிரிவுகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இது வழக்கமான நடைமுறை ஆகும். ஆனால், கடத்தல் கும்பல் பயன்படுத்தும் வாகனங்களில், சிறப்பு அம்சமாக, ஒரு ரகசிய பகுதி அமைக்கப்பட்டிருக்கும். இந்த பகுதியில் 50 முதல் 100 லிட்டர் எரிபொருளை பதுக்க முடியும்.
எண்ணெய் நிறவனங்களிலிருந்து எரிபொருளை நிரப்பிக் கொண்டு , பல்வேறு சோதனைகளை கடந்து, கிடங்கை விட்டு வெளியேறும் லாரி, அங்கிருந்து நேராக, கடத்தல் கும்பல் இருக்கும் பகுதிக்கு செல்லும். அங்கு தயாராக நிற்கும் கடத்தல் கும்பல், ரகசிய பகுதியில் உள்ள எரிபொருளை எடுத்து விடுவர். இந்த செயல்பாடுகள் பெரும்பாலும், நாசிக் - மும்பை நெடுஞ்சாலையில் நடைபெற்றுள்ளது.
இந்த கடத்தல் சம்பவங்களில், தனியார் நிறுவன ஊழியர்கள், கடத்தல் கும்பல்களுக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளனர்.. கடத்தல் கும்பலின் கைக்கு வரும் எரிபொருள், பல்வேறு கலப்படத்திற்கு பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. பெட்ரோல் விலை சமீபகாலமாக உயர்ந்து வரும் நிலையிலும், மண்ணெண்ணெய் விலை உயராததற்கு, அதில் கலப்படம் அதிகளவில் நடைபெறுவதே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2005ம் ஆண்டில் மட்டும், கள்ளச்சந்தையில், ரூ. 10,000கோடி அளவிற்கு எரிபொருள் விற்பனை நடந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மாவட்ட உதவி கலெக்டர் யஷ்வந்த் சோனேவானின் படுகொலைக்குப் பிறகு, மகாராஷ்டிரா அரசு விழித்துக் கொண்டுள்ளது. விரைவில், இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு முடிவு காண முனைப்புடன் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.