மனித நேய மக்கள் கட்சியினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக தேர்தல் பணிக் குழுவினரோடு பேச்சு நடத்தி வருகின்றனர்.
நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மனித நேய மக்கள் கட்சியினருடன் அதிமுக தேர்தல் பங்கீட்டுக் குழுவைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பேச்சு நடத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஜி. ராமகிருஷ்ணன், டி.கே. ரங்கராஜன், கே. பாலகிருஷ்ணன் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இதையடுத்து நிருபர்களிடம் அவர்கள் பேசுகையில், விரைவில் தொகுதிகள் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றனர்.
கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற இந்தக் கட்சி 13 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் வென்றது. இம்முறை இந்தக் கட்சி 18 தொகுதிகள் கேட்கிறது.
இதையடுத்து மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் அதன் நிர்வாகிகள் ஹைதர் அலி, ஜவாகிருல்லா ஆகியோர் நேற்று மாலை அதிமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந் நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் பணிக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், துணை செயலாளர் மகேந்திரன், கோ.பழனிச்சாமி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 10 இடங்களில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அவர்களுக்கு திமுக ஒரு ராஜ்ய சபா சீட்டும் வழங்கியது.
இந்தத் தேர்தலில் அந்தக் கட்சி 15 தொகுதிகள் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.
அதிமுக கூட்டணியில் இதுவரை சிறிய கட்சிகளுக்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.அதிலும் கூடுதல் இடங்கள் கேட்டு பிரச்சனையை ஆரம்பித்துவிட்டது புதிய தமிழகம்.
அதே நேரத்தில் விஜய்காந்தின் தேமுதிகவுடனும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுள்ளன. அந்கக் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு இறுதியாகும் வரை மதிமுகவுக்கும், இடதுசாரிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்குவதை அதிமுக ஒத்தி்ப் போட்டு வருவதாகத் தெரிகிறது.