வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி வரலாறு படைக்க முயற்சிக்க வேண்டும் என, ஓய்வு பெற்ற இந்திய வீரர் கும்ளே தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை தொடரில் 1983ல் கோப்பை வென்றபின், 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கோப்பை வெல்லும் நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளது. இதுகுறித்து சுழல் ஜாம்பவான் கும்ளே கூறியது:
டோனி தலைமையில் உள்ள இந்திய அணி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிலும் சொந்த மண்ணில் வீழ்த்த முடியாத அணியாக வலம் வருகிறது. ஒருநாள் போட்டிக்குரிய அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ள இந்த அணி, 2003ஐ விட சிறப்பாக உள்ளது.
தவிர, 2003 தொடரில் இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஜாகிர் கான், ஆஷிஸ் நெஹ்ரா இருவரும் இப்போதும் உள்ளனர். ஆனால் அப்போது 140 கி.மீ., வேகத்தில் பவுலிங் செய்தனர். இன்று அதுபோல முடியாது. அதேநேரம், அணியை தோல்வியில் இருந்து மீட்டு, எப்படி வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற அனுபவம் வந்துள்ளது. தென் ஆப்ரிக்க தொடரில் முனாப், யூசுப் பதான் என ஒவ்வொருவரும் ஒரு போட்டியை வென்று தந்தனர். இதன்மூலம், இந்திய அணி யாரையும் நம்பி இல்லை என்பது தெளிவாகிறது.
அணியில் இப்போது இடம்பெற்றுள்ள 15 வீரர்களும், அடுத்த உலக கோப்பை தொடரில் அப்படியே பங்கேற்க முடியாது. இதனால் தற்போது கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி, வரலாறு படைக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு கும்ளே கூறினார்.