சென்னை:நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகமானது (தே.மு.தி.க.) ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டை ஏற்படுத்த முயற்சிப்பதாகத் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் கருணாநிதியின் தி.மு.க. ஆட்சியை வெளியேற்றுவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
தே.மு.தி.க.வின் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு அ.தி.மு.க.வுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கிறது. விஜயகாந்தின் ஐந்து வருடகாலக் கட்சியானது கூட்டணி அரசியலுக்கு முதன்முறையாகத் திரும்பியிருக்கிறது. இதுவரை காலமும் தனது கூட்டணி கடவுளுடனும் மக்களுடனும் மட்டுமே என்று விஜயகாந்த் கூறி வந்திருக்கிறார்.
"தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை வெளியேற்ற நாம் விரும்புகின்றோம். ஆதலால் நாங்கள் அ.தி.மு.க.வுடன் நிற்கிறோம் என்று தே.மு.தி.க. வின் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் நேற்று முன்தினம் தெரிவித்தார். அ.தி.மு.க. தலைமையகத்தில் 75 நிமிடங்கள் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் பண்ருட்டி ராமச்சந்திரன் இதனைக் கூறியுள்ளார்.
இரு கட்சிகளுக்குமிடையில் ஆசனப்பங்கீடு தொடர்பான பூர்வாங்கப் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததாகவும் தொகுதிகள் பங்கீடு தொடர்பாக முடிவு விரைவில் எடுக்கப்படவுள்ளதாக ராமச்சந்திரன் இந்து பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கிறார்.
தமிழக மக்கள் அரசாங்கம் மாற வேண்டுமென விரும்புகின்றனர். மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற எமது தலைவர் விஜயகாந்த் மாநிலத்தில் உள்ள சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு ஆளும்கட்சியைத் தோற்கடிக்க வேண்டுமென விரும்புகிறார் எனக் கூறினார். ஆசனங்களின் எண்ணிக்கை தொடர்பாக அவருடைய கட்சி அக்கறை கொண்டுள்ளதா? எனக் கேட்கப்பட்டபோது, எமது கரிசனை தி.மு.க. அரசாங்கத்தின் வெளியேற்றமே என அவர் குறிப்பிட்டார்.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றால் தே.மு.தி.க. அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமா என்று கேட்கப்பட்டபோது,நாங்கள் ஏற்கனவே அறிவித்துவிட்டோம். அமைச்சில் நாங்கள் இணைந்துகொள்ள மாட்டோம் என அவர் கூறியுள்ளார்.
எந்தவொரு கட்சிகளுடனும் கூட்டு வைக்கப்போவதில்லை என விஜயகாந்த் பலதடவைகள் கூறிவந்தாரே என்று நிருபர் ஒருவர் சுட்டிக்காட்டியபோது "மக்களின் குரல் கடவுளின் குரல்' தி.மு.க. வெளியேற வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். அதனால் நாங்கள் கூட்டணிக்கு முயற்சிக்கின்றோம் என்று குறிப்பிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன், உத்தேசக் கூட்டணி வெற்றிபெறுமெனத் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க ஜெயலலிதாவின் 63 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்த் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.