சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணய சாசனத்தைத் தயாரிக்க ஏதுவாக, 1946ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அதில், வரி கட்டுபவர்கள் மட்டுமே ஓட்டு போட்டனர். அத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, அனைத்து மாநிலங்களிலும் அரசமைத்தது. அப்போதைய தேசிய சட்டசபையையும் பிடித்தது. அதன் பிறகு தான், அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது.
அந்த சபையில், காங்கிரசார் மட்டுமல்லாமல், இந்தியாவின் மிகப்பெரிய ராஜதந்திரிகள், நீதிபதிகள், வக்கீல்கள், சமுதாயத் தலைவர்கள் அங்கம் வகித்தனர். அவர்கள் மூலம் ஓர் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி இந்தியா, "சுயஅதிகாரமுள்ள ஜனநாயகக் குடியரசு' என அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக, வயதிற்கு வந்தோருக்கு ஓட்டளிக்கும் உரிமை வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக, நேருவுடன் இந்தியாவின் கடைசி வைஸ்ராயான மவுண்ட் பேட்டன் கலந்து பேசும்போது, "இவ்வளவு பரவலான ஜனநாயகத்தை இந்தியாவுக்கு வழங்கக் கூடாது. நூற்றுக்கு தொண்ணூறு பேர் தற்குறிகளாக இருக்கும் ஒரு நாட்டில், இப்படி பரவலாக ஜனநாயகத்தை வழங்குவது ஆபத்தானது. 21 வயதில் ஓட்டுரிமை அளித்தால் ஜமீன்களும், மிட்டாக்களும், மிராசுகளும், சமஸ்தானாதி பதிகளும், பணக்காரர்களும் நிறைந்த இந்நாட்டில், அவர்கள் ஓட்டை விலைக்கு வாங்கி, இவ்வளவு நாள் பாடுபட்ட காங்கிரசை இருக்கும் இடம் தெரியாமல் அழித்துவிடுவர்' என்றார்.
அதற்கு நேருவோ, "இதுவரை பெரிய ஜாதிக்காரர்கள், பணக்காரர்கள், தங்கள் வீட்டுப் பக்கம் கூட ஏழைகளை அனுமதிப்பதில்லை. அவர்களின் குடியிருப்பு பக்கம் கூட போனதில்லை. கீழ்ஜாதி, மேல்ஜாதி என்று கொடுமை இந்நாட்டில் மிக அதிகம். அவர்கள் வீட்டுப் பக்கம் போவதே பாவம் என கருதிக்கொண்டுள்ளனர். அப்படிப்பட்டவர்கள் கையில், நாட்டின் தலையெழுத்தை மாற்றும் ஓட்டுக்களை கொடுப்பதால், இனி ராஜாக்கள், ஜமீன்கள், மிராசுகள் கிடையாது.
எம்.எல்.ஏ., - எம்.பி., ஆக வேண்டும் என விரும்புபவர்கள், ஏழைகளின் குடிசைப்பக்கம் நுழைந்து, அவர்களின் காலை கையை பிடித்து, அவன் வீட்டிலேயே மோர் வாங்கிக் குடித்து, "உங்களுடைய ஓட்டு வேண்டும்' என கெஞ்சுவார்கள். அந்த ஒரு காரணத்திற்காகவாவது, நான் ஏழைகளின் கையில் 21 வயதிலேயே ஓட்டுரிமை கொடுப்பேன்' என்றார்.அப்படித்தான் 1952ம் ஆண்டு நடந்த தேர்தலில், "வயது வந்தோருக்கு ஓட்டுரிமை' என்ற அடிப்படையில், எல்லாருக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டது.-நமது சிறப்பு நிருபர்-