அலிகார்: உத்திரப் பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் படித்து வருகின்றனர். இவர்களுக்கும் அசம்கார் பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் நீண்ட காலமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் அக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் முறைகேடு செய்ததாக பல்கலைக்கழக துணை கட்டுப்பாட்டாளர் பதவி விலக கோரி அசம்கார் மாணவர்கள் போராட்டம் செய்தனர். நேற்று முன் தினம் மாணவர்கள் சிலர் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது கட்டுப்பாட்டாளருக்கு ஆதரவாக பீகார் மாணவர்கள் குரல் எழுப்பினர்.
இந்தப் பிரச்னை காரணமாக நேற்று இரவு இரு தரப்பிலும் உள்ள மாணவர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இதில் 12 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அடுத்த 48 மணி நேரத்தில் விடுதிகளை காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்துக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.