இதுவரை இல்லாத வகையில் வாக்காளர்களிடையே எழுச்சி ஏற்பட்டு, கிட்டதட்ட 80 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த அதிகப்படியான வாக்கு சதவீதம் யாரை வீழ்த்தும்? யாரை ஆட்சியில் அமர்த்தும்? என்பது புரியாத புதிராக உள்ளது. தேர்தலில் வெற்றி பெறப் போகும் கட்சி எது? என்பது பற்றி களம் கண்ட கட்சி தலைவர்கள் சிலரின் கருத்துக்கள் இதோ; பிரபல எழுத்தாளர் சோ: இந்த முறை தேர்தல் கமிஷனின் சிறப்பான செயல்பாடு காரணமாக மக்களிடையே வாக்களிக்க வேண்டும் என்ற ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. நமது ஓட்டு வீணாகாது என்ற நம்பிக்கை வாக்களர்களிடம் உருவாகி இருக்கிறது. தி.மு.க.வை ஆட்சியில் இருந்து விலக்க வேண்டும் என்ற எண்ணம் பெருவாரியான மக்களிடம் தோன்றி இருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டுமல்ல. விலை வாசி உயர்வு, மின்வெட்டு போன்ற பல காரணங்கள் சேர்ந்து கொண்டு மக்களை அதிக அளவில் வாக்களிக்க வைத்துள்ளது. இது தி.மு.க. ஆட்சியை மாற்றுவதற்கான வாக்குகள்தான் என்றே கருதுகிறேன். அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:- தி.மு.க. தொண்டர்களின் கடினமான உழைப்பு காரணமாகவே வாக்காளர்கள் பெருமளவில் சென்று ஓட்டு போட்டிருக்கிறார்கள். இதனால் தான் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளும் இந்த தேர்தலில் அமோக வெற்றி பெறும். எங்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழக அரசின் திட்டங்கள், வேலை வாய்ப்புகள் கிராம மக்களுக்கு அதிக அளவில் கிடைத்துள்ளது. எனவே கிராம மக்கள் ஆர்வமுடன் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். இது மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அவர்களுடைய விருப்பத்தையே காட்டுகிறது. நகரங்களிலும் தி.மு.க. வுக்கு ஆதரவாகவே மக்கள் இருக்கிறார்கள். அதனால் தான் அதிக அளவில் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. எனவே மீண்டும் ஆட்சி அமைவது உறுதி. அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன்:- 1967-ல் 76.5 சதவீத வாக்கு பதிவானது. அப்போது காங்கிரஸ் ஆட்சியை அகற்றி விட்டு தி.மு.க.வை முதல் முறையாக மக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள். ஒரு ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் போது இந்த மாதிரி எழுச்சி ஏற்படும். அப்படிப்பட்ட எழுச்சியைத்தான் இந்த தேர்தலில் பார்க்க முடிந்தது. மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சகிக்க முடியாத ஊழல், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு போன்ற கார ணங்களால் மக்களுக்கு தி.மு.க. மீது கடும் அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது. எனவேதான் அலை அலையாக வந்து மக்கள் ஓட்டளித்துள்ளார்கள். இளைஞர்கள், பெண்கள், படித்தவர்கள் என்று எல்லா தரப்பினரும் வந்து வாக்களித்துள்ளார்கள். அனைவரிடமும் மவுன பரட்சி இருந்துள்ளது. இந்த அலை இரட்டை இலைக்கு சாதகமான அலை. அ.தி.மு.க. நிச்சயம் தனித்தே ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெறும். பா.ம.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி:- ஒரு ஆட்சியின் மீது கொண்ட வெறுப்பால்தான் அதிக அளவில் மக்கள் வாக்களிப்பாளர்கள் என்பது தவறான வாதம். தி.மு.க. ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட எந்த காரணமும் இல்லை. ஏழைகள், சுயஉதவி குழு பெண்கள், விவசாயிகள், மாணவர்கள் என்று எல்லா தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் கடந்த 5 ஆண்டுகளில் திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்கள். மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தால் சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. எனவே தான் எல்லா தரப்பு மக்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளார்கள். எனவே தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாகத்தான் அமையும். காங்கிரஸ் எம்.பி. ஞானதேசிகன் கூறியதாவது:- தமிழக வாக்காளர்கள் இந்த தேர்தலில் ஆர்வமுடன் வந்து வாக்களித்தது தி.மு.க. மீண்டும் ஆட்சியை தொடர வேண்டும் என்ற எண் ணத்தின் வெளிப்பாடாகவே நாங்கள் கருதுகிறோம். தி.மு.க. ஆட்சியின் 5 ஆண்டு சாதனையுடன் மத்திய-மாநில அரசுகளின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மக்களை வெகுவாக கவர்ந்ததாகவே கருத வேண்டி உள்ளது. குறிப்பாக சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசின் வழி காட்டுதலில் நிறைவேற்றப்பட்ட 100 நாள் கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம், வங்கிகளில் கல்வி கடன் வழங்கியது இவற்றின் வெளிப்பாடு மக்கள் ஆர்வ முடன் வந்து ஓட்டு போட்டதாக கருதுகிறோம். இதுதவிர போட்டோ ஒட்டிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கியது, தேர்தல் கமிஷனின் விழிப் புணர்வு பிரசாரம் ஆகியவை மக்களை அதிக அளவில் ஓட்டளிக்க வைத்துள்ளதற்கு காரணம்.. பா.ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்:- ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்ற தீவிர எண்ணம்தான் மக்களை பெருமளவு வாக்களிக்க வைத்துள்ளது. அதற்காக இதை அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அலை என்றும் சொல்ல முடியாது. வேறு வழியில்லாமல் வேண்டுமானால் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து இருப்பார்கள். கடந்த கால செயல்பாடுகளை நினைத்தோ அல்லது இனி நன்றாக செயல்படுவார் என்ற எண்ணத்திலோ ஜெயலலிதாவுக்கு வாக்களிக்க சாத்தியமில்லை. இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எல்லா தொகுதிகளிலும் கணிசமான வாக்குகள் கிடைக்கும். ஒரு சில தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்றார். |