கடந்த 1952ம் ஆண்டு, அரசினர் தோட்டத்தில் புதிய சட்டசபை மண்டபம் கட்டப்பட்டு, அதை 1952, மே 2ம் தேதி அன்று, கவர்னர் ஸ்ரீ பிரகாசா திறந்து வைத்தார். அதுவே பின், பாலர் அரங்கமாகவும், கருணாநிதி ஆட்சிக் காலத்தில், கலைவாணர் அரங்கமாகவும் விளங்கியது.
கடந்த 1957 தேர்தலுக்கு பின், புனித ஜார்ஜ் கோட்டை பேரவை மண்டபத்தில், மீண்டும் பேரவைக் கூட்டங்கள் நடைபெறத் துவங்கி, கடந்த கூட்டத்தொடர் வரை நடந்தது. கடந்த 1957ல், பேரவை இந்த வளாகத்திற்கு வந்த பிறகு, தொடர்ந்து இந்த அவையில் உறுப்பினராக இருந்து, சட்டசபைப் பணியில் பொன்விழாவையும் கண்டு, இன்றளவும் அவையை அலங்கரித்து, ஈடு இணையற்ற சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கும் தலைவர் தான், நமது முதல்வர்.
ஓமந்தூராருக்கு பிறகு, பி.எஸ். குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜர், பக்தவச்சலம் ஆகியோர் முதல்வர்களாக இருந்தனர். அதன் பின்னர், எம்.ஜி.ஆரும், ஜானகி அம்மையாரும், ஜெயலலிதாவும், ஓ.பன்னீர்செல்வமும், அந்த மாமன்றத்தில் முதல்வர்களாக இருந்திருக்கின்றனர்.
அதன் பிறகு, 2006ல் நடந்த சட்டசபை பொது தேர்தலில், தி.மு.க., கூட்டணி, ஆட்சியை பிடித்தது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன், முதல்வராக பொறுப்பேற்றார் கருணாநிதி. 2007ல், சட்டசபையில் பொன்விழா கண்ட கருணாநிதிக்கு, பாராட்டு விழா நடந்தது.
அந்த நிகழ்ச்சியில், புதிய சட்டசபை கட்டடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. 2008ல், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிய சட்டசபைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கட்டடப் பணி முடிவுற்று, 2010ல், புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலகம் திறப்பு விழா நடந்தது. இந்த புதிய சட்டசபை வளாகத்தில், கவர்னர் உரை, பட்ஜெட் தாக்கல் ஆகியவை நடந்தன.