குஜராத் மாநிலத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஹிந்து-முஸ்லிம் கலவரத்தின் பின்னணியில் முதல்வர் நரேந்திர மோடி செயல்பட்டதாக மாநில உயர் காவல்துறை அதிகாரி குற்றம் சாட்டியிருந்தார். காவல்துறை உயரதிகாரி சஞ்ஜீவ் பட் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில் இந்த குற்றச்சாட்டை அவர் கூறியிருந்தார். கலவரத்தில் முஸ்லிம்களைக் காக்கும் பணியில் ஈடுபட வேண்டாம் என்று உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு மோடி உத்தரவிட்டதாக கூறியுள்ளார். இதிலிருந்தே இந்த வன்முறை சம்பவத்தில் நரேந்திர மோடிக்கு உள்ள பங்கு தெளிவாகத் தெரிகிறது. எனவே இது தொடர்பான விசாரணையை மேலும் தாமதப்படுத்தத் தேவையில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி அவர் மீது சட்டப்படி வழக்குத் தொடர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் சஞ்ஜீவ் பட் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை நடைபெற்றபோது அதைத் தடுக்க முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.