அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

12 ஏப்., 2011

வன்முறை நிகழாமல் தேர்தலை நடத்த ஜெயலலிதா வலியுறுத்தல்

சென்னை, ஏப்.12: அசம்பாவிதச் சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் மத்திய ரிசர்வ் படைகளை அனுப்ப வேண்டும் என்றும், வாக்காளர்கள் அச்சமின்றி சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடைபெற இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வி உறுதி என்பதை அறிந்த முதல்வர் கருணாநிதி, பண பலம், படை பலம், அதிகார பலம் ஆகியவற்றின் மூலம் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
கோவை மாவட்டம், மடத்துக்குளம் தொகுதிக்குட்பட்ட உடுக்கம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க தி.மு.க. அரசின் அமைச்சர் சாமிநாதன் ஏற்பாடு செய்து இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அதிமுகவினர்
அந்த வீட்டினை முற்றுகையிட்டதுடன், தேர்தல் அதிகாரிக்கும், காவல் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். மடத்துக்குளம் தொகுதியின் அதிமுக வேட்பாளர்சி. சண்முகவேலு அவர்களும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். இந்தத் தருணத்தில் திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் வீட்டிலிருந்து தி.மு.க.வினர் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.  இந்தத் தாக்குதலில் சண்முகவேலு மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுகவினர் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.  இதன் விளைவாக அந்தப் பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
அதிமுக திருப்பூர் மாவட்டச் செயலாளர் மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமாகிய சி. சண்முகவேலு மற்றும் பலர் மீது தி.மு.க.வினர் நடத்தியுள்ள கொலை வெறித் தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  
மேற்படி கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த சண்முகவேலு பூரண நலமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்தத் தாக்குதலுக்கு காரணமான தி.மு.க. அரசின் அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட தி.மு.க.வினரை கைது செய்ய தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இது மட்டுமின்றி, பென்னாகரம் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக தி.மு.க.வினர் ஈடுபட்டதை சுட்டிக்காட்டிய தே.மு.தி.க. கிளைச் செயலாளர் அசோகனை தி.மு.க.வினர் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளனர். தி.மு.க.வினரின் இந்த கொலை வெறியாட்டத்திற்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதில் சம்பந்தப்பட்ட தி.மு.க.வினரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இந்த வன்முறை வெறியாட்டத்தில் மரணமடைந்த தே.மு.தி.க. கிளைச் செயலாளர் அசோகன் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தற்போது தி.மு.க.வினரால் நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறைகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் போதுமான மத்திய ரிசர்வ் படைகளை அனுப்பி, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும்,  வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்தையும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியையும், காவல் துறையையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
free counters