1999ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி 150 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் காத்மாண்டுவிலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பியபோது அதை தலிபான் தீவிரவாதிகள் கடத்தினர். முதலில் பாகிஸ்தானுக்கும் பின்னர் அங்கிருந்து ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கும் கடத்திச் செல்லப்பட்டது.
விமானத்தை விடுவிக்க அவர்கள் பேசிய பேரத்தைத் தொடர்ந்து அப்போதைய வாஜ்பாய் அரசு பணிந்தது. அதன் விளைவாக ஜெய்ஸ் இ முகம்மது அமைப்பின் தலைவன் மெளலானா மசூத் அசார் உள்ளிட்ட 3 முக்கியத் தீவிரவாதிகளை இந்திய அரசு விடுவித்தது.
ஆறு நாட்கள் நீடித்த இந்த விமானக் கடத்தல் சம்பவம் அப்போது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விமானக் கடத்தல் தொடர்பாக சிபிஐ தாக்கல்செய்த குற்றப்பத்திரிக்கையில் அப்துல் ராஃப் என்ற பாகிஸ்தான் நபரை முக்கியக் குற்றவாளியாக தெரிவித்திருந்தது. விமானக் கடத்தல்காரர்களுக்கு நிதியுதவி செய்த நபர்களில் இந்த ராஃப்பும் ஒருவர். இவன், மசூத் அஸாரின் மச்சான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரைப் பற்றியத் தகவல் கொடுத்தாலோ அல்லது பிடித்துக் கொடுத்தாலோ ரூ. 10 லட்சம் பரிசு தரப்படும் என்றும் சிபிஐ அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த ராஃப் பிடிபட்டுள்ளான்.
காந்தஹார் சம்பவத்திற்குப் பின்னர் ராஃப் எங்கும் தென்படவில்லை. ஆனால் கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம், தலிபான் தீவிரவாதிகளால் ராவல்பிண்டியில் 42 பேர் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டக் குழுவில் இந்த ராஃபும் இடம் பெற்றிருந்தான். இதன் மூலம் பாகிஸ்தான் அரசுக்கும், ராஃபுக்கும் இடையே தொடர்பு இருப்பது வெளிப்படையாக தெரிய வந்தது.
இந்த நிலையில் தற்போது சிலியில் வைத்து ராஃப் பிடிபட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதையடுத்து பிடிபட்டுள்ள ராஃப் தாங்கள் தேடும் நபர்தானா என்பதை உறுதி செய்வதற்காக சிபிஐ குழு சிலி விரைகிறது. சிபிஐ குழுவுடன் ரா குழுவைச் சேர்ந்தவர்களும் செல்கின்றனர்.
போலி விசா மூலம் ராஃப் சிலிக்கு வந்ததாக தெரிகிறது. அப்போது இன்டர்போல் போலீஸ் உஷார்படுத்தியதைத் தொடர்ந்து ராஃப் பிடிபட்டான்.
கடந்த 2005ம் ஆண்டு ராஃப்பின் புகைப்படத்தைக் கொடுத்து விசாரணைக்கு உதவுமாறு அமெரிக்காவைக் கோரியிருந்தது இந்தியா என்று சமீபத்தில் வெளியான விக்கிலீக்ஸ் ரகசிய ஆவண வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அமெரிக்காவின் வசம் சிக்கியிருந்த ஆப்கானிஸ்தானில் முன்பு ஆட்சியை கையில் வைத்திருந்த தலிபான் அரசின் முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் மன்சூர் அக்தர், தலிபான் அமைப்பின் காந்தஹார் படைப் பிரிவின் தலைவராக இருந்த அக்தர் உஸ்னானி என்பவரை விசாரிக்க தங்களை அனுமதிக்குமாறும் இந்தியா கோரியிருந்தது. ஆனால் வழக்கம் போல தீவிரவாதம் தொடர்பானவற்றில் இரட்டை வேடம் போடும் அமெரிக்கா இந்தியாவின் இக்கோரிக்கைகளை இதுவரை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.