அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

4 ஜன., 2011

வறுமையை ஒழிக்க கருணாநிதியிடம் எந்தத் திட்டமும் இல்லை: ஜெயலலிதா


சென்னை, ஜன.4:  ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும் என முதல்வர் கருணாநிதி அறிவித்திருப்பதன்மூலம் வறுமையை ஒழிக்க அவரிடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஏழை, எளிய மக்கள் இருக்கின்ற வரை இலவசங்கள் தொடரும் என்று சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசி இருக்கிறார்.  இதை வலியுறுத்தியதன் மூலம் ஏழை, எளிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தனக்கு உள்ள அக்கறையை கருணாநிதி வெளிப்படுத்தவில்லை. மாறாக, ஆசியாவில் உள்ள மிகப் பணக்கார குடும்பத்தின் தலைவர் என்ற முறையில், பணக்காரன் -ஏழை என்ற பாகுபாட்டை வெளிப்படையாக வலுப்படுத்தி இருக்கிறார் கருணாநிதி. வறுமையை ஒழிப்பதற்கு தன்னிடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதை கருணாநிதி ஒப்புக் கொண்டு இருக்கிறார்.  தமிழகத்தில் உள்ள ஏழை மக்கள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்று  தான் கருணாநிதி விரும்புகிறார். அப்பொழுது தான், சலுகைகளையும், இலவசங்களையும் லஞ்சமாகக் கொடுத்து, ஏழை, எளிய மக்களின் வாக்குகளை பெற முடியும் என்று நினைக்கிறார் கருணாநிதி.
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு, சீனாவை அடிபணிய வைப்பதற்காகவும்,  அந்த நாட்டு மக்களை பிரிட்டனின் அடிமைகளாக ஆக்க வேண்டும் என்பதற்காகவும், சீனர்களுக்கு போதை மருந்தை பிரிட்டிஷார் ஊட்டினர்.  இதன் விளைவாக பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து சீனர்கள் விடுதலை பெற நூறாண்டுகள் ஆகியது.   இது போன்ற மேலாதிக்கம் இந்த மாநிலத்தில் உள்ள ஏழை மக்கள் மீது நிரந்தரமாக நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று கருணாநிதி விரும்புகிறார்.
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரூ 1-க்கு ஒரு கிலோ அரிசி கிடைக்கின்ற அதே சமயத்தில், வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ. 90. இது தான் இன்றைய நிலைமை. அனைத்துக் காய்கறிகளும் ஒரு கிலோ ரூ 50-க்கு மேல் தான் விற்கப்படுகின்றன.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், பல மணி நேர மின்வெட்டு மூலம், உத்தேச பயனாளிகளுக்கு இந்தச் சலுகை பயனளிப்பதில்லை.
தொலைக்காட்சிப் பெட்டிகள் இலவசமாக தரப்படுகின்றன. ஆனால் கேபிள் இணைப்புகளுக்கு அதிக செலவு ஆகிறது.
இலவசங்கள், பணம் மற்றும் சலுகைகள் ஆகியவற்றை சார்ந்து வாழும் தமிழக மக்களை வைத்து இந்த நாட்டை சுரண்டலாம் என்பது  கருணாநிதியின் தந்திரம்.  தமிழக மக்கள் நிரந்தரமாக ஏழைகளாக இருக்க வேண்டும் என்பது தான் கருணாநிதியின் குறிக்கோள்.  இன்று கருணாநிதி முதல்வர்.  கருணாநிதியின் ஒரு மகன் துணை முதல்வர்.  மற்றொரு மகன் மற்றும் பேரன் மத்திய அமைச்சர்கள்.  ஒரு மகள் மாநிலங்களவை உறுப்பினர்.  தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் கருணாநிதி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.  திரைப்படத் துறையை கருணாநிதி குடும்பத்தினர் கபளீகரம் செய்துவிட்டனர்.  தமிழகத்திலும், வெளி நாடுகளிலும் கல்லூரிகளையும், நட்சத்திர ஓட்டல்களையும் கருணாநிதி குடும்பத்தினர் வாங்கி குவித்துக் கொண்டிருக்கின்றனர்.  தமிழகத்தில் நடைபெறும் சட்ட விரோத மணல் கொள்ளை கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் தான் இயங்குகிறது. சட்ட விரோத கிரானைட் கொள்ளையும் இவர்கள் ஆதிக்கத்தில் தான் நடைபெறுகிறது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நாள், பதில் சொல்ல வேண்டிய நாள் வெகுதொலைவில் இல்லை என ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
free counters