அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

5 பிப்., 2011

எகிப்து புரட்சி - 9ஆம் நாள்(வீடியோ இணைப்பு)

30 ஆண்டுகளாக எகிப்து நாட்டின் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்து வரும் ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்று வரும் மக்கள் புரட்சியின் 9 ஆம் நாள் (02-02-2011) நிகழ்வுகள் வருமாறு:
* நள்ளிரவு 12.30 மணி அளவில் அலெக்சாண்டிரியா நகரில் அரசுக்கு எதிரான மக்களுக்கும் அரசுக்கு ஆதரவான மக்களுக்கும் இடையே சண்டை மூண்டது. துப்பாக்கிச் சப்தமும் கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

* எகிப்து மக்களை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதித்த எகிப்து இராணுவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்தார். "தங்கள் தலைவராக யார் இருக்க வேண்டும் என்பதை எகிப்து மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.


* "அமெரிக்கத் தூதர் ஃபிரான்க் விஸ்னர் முபாரக்கைச் சந்தித்து அவருக்கு ஊக்கம் அளித்துள்ளார். தங்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளும் வரை முபாரக் பதவியில் நீடிக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டதாக" எகிப்தின் எதிர்கட்சிகளில் ஒன்றான கிஃபாயா கட்சியின் தலைவர் அப்துல் ஹலீம் கன்ட்லி குற்றம் சாட்டியுள்ளார்.

* எகிப்து அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப் போவதில்லை என ஹோஸ்னி முபாரக் கூறியதைத் தொடர்ந்து, "எகிப்து மக்கள் தங்கள் கோரிக்கையைப் பெற்றுவிட்டனர். அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள்" என எகிப்து இராணுவம் கூறியது.

* முடக்கப்பட்ட இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டது. ஆனால், சமூக வலைத் தளங்கள் முடக்கப்பட்டே உள்ளன. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு, ஊரடங்கின் நேரம் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை எனக் குறைக்கப்பட்டுள்ளதாக எகிப்து தொலைக்காட்சி கூறியது.



* "முபாரக் பதவி விலகும் வரை போராட்டம் நடைபெறுவதை நாங்கள் ஆதரிக்கிறோம். இது தொடர்பாக ஹோஸ்னி முபாரக்கால் நியமிக்கப்பட்ட துணை அதிபருடன் எவ்விதப் பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் தயாராக இல்லை" என முஸ்லிம் சகோதரர்கள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அப்துல் முமீன் கூறினார்.

* மதியம் 2 மணி அளவில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விடுதலைத் திடல் அருகே சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக முபாரக் ஆதரவாளர்கள் திரண்டனர்.

* சுமார் 2.30 மணி அளவில் அரசு ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே சண்டை மூண்டது.

* "இராணுவம் உடனடியாகத் தலையிட வேண்டும்" என முபாரக் எதிர்ப்பாளர்கள் கோரினர். ஆனால், இராணுவமும் காவல்துறையும் தலையிடவில்லை. சிலர் குதிரைகளிலும் ஒட்டகங்களிலும் விடுதலைத் திடலுக்குள் நுழைந்தனர்.

* "பதவி மாற்றத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்" என்று ஐரோப்பியக் கூட்டமைப்பு முபாரக்கைக் கேட்டுக் கொண்டது. "செப்டம்பர் வரை பொறுக்க இயலாது என்றும் முபாரக் உடனடியாகப் பதவி விலக வேண்டும்" என்றும் முஸ்லிம் சகோதரர்கள் கட்சி வலியுறுத்தியது.

* "மக்களின் கோரிக்கையை ஏற்று பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறிவித்த முபாரக்கை நான் வாழ்த்துகிறேன். தலைமைக்கு எதிராகச் செயல்படுவது (ஹராம்) தடுக்கப்பட்டது. சிலர் குழப்பத்தின் பக்கம் மக்களை அழைக்கின்றனர். நாங்கள் நாட்டின் ஸ்திரப்பாட்டை ஆதரிக்கிறோம். தற்போதைய நிலை உள்நாட்டுப் போருக்கு வழி வகுக்கக் கூடும். எனவே, மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டும்" என்று எகிப்தின் தலைமை இமாம் அலி ஜுமா கோரிக்கை விடுத்தார்.

* இராணுவ வாகனத்தை முபாரக் ஆதரவாளர்கள் கைப்பற்றினர் என்றும் துப்பாக்கிச் சப்தம் கேட்டது என்றும் தகவல்கள் வந்தன.

* விடுதலைத் திடலை ஒட்டி அமைந்துள்ள பெரிய கட்டிடங்கள் மீது முபாரக்கின் ஆதரவாளர்கள் ஏறி நின்று கொண்டு அரசுக்கு எதிராக அமைதியாகப் போராடுபவர்கள் மீது கற்களை வீசியதாக போராட்டக்காரர்கள் கூறினர்.

* "எகிப்திய அரசு வன்முறைக்குத் துணை போவதை ஆதரிக்க முடியாது" என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கூறினார்.

* எகிப்திய நிகழ்வுகள் குறித்த தகவல்களை ஒரு சேரத் தருவதற்காக கூகிள் இணைய தளம் "Crisis Response" என்ற பக்கத்தை உருவாக்கியது.

* "இராணுவ உடைகளைச் சிலர் திருடிவிட்டனர்" எனவும் "அவர்களைப் பொதுமக்கள் பிடித்து இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்" எனவும் எகிப்திய இராணுவம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது.

* "முபாரக்கை அதிபர் பதவியில் இருந்து நீக்க இராணுவம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தாம் எதிர்பார்ப்பதாக" முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

* அதிபர் பதவியில் இருந்து முபாரக் விலக வேண்டும் என்ற பன்னாட்டுக் கோரிக்கையை ஏற்க எகிப்து அரசு மறுத்துவிட்டது.

* போராட்டத்தில் குழுமியுள்ள மக்களிடையே கட்டிடங்களின் மேலிருந்து தீக்குண்டுகளை முபாரக் ஆதரவாளர்கள் வீசினர்.

* நேற்று வரை அமைதியான முறையில் தங்களின் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தி வந்த மக்களிடையே குதிரை மற்றும் ஒட்டகங்களில் முபாரக் ஆதரவாளர்கள் நுழைந்தது, கூட்டத்தைக் கலைப்பதற்கும் மக்களைப் பயமுறுத்தி விரட்டுவதற்குமே என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

* மக்கள் போராட்டத்தின் இடையே ஆயுதங்களுடன் நுழைபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் என இராணுவம் அறிவித்துள்ளது.

* முபாரக் எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் ஒருவர் இறந்ததாகவும் 403 பேர் காயமடைந்ததாகவும் எகிப்து அரசு வெளியிட்ட செய்தி கூறுகிறது.

* முபாரக் எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்குமிடையே நடைபெற்ற சண்டையினைத் தொடர்ந்து தற்போது விடுதலைப் போராட்டத் திடலில் அமைதி நிலவுகிறது.  மக்களின் போராட்டம் தற்போதும் தொடர்ந்து நடந்துவருகிறது.

* முபாரக் எதிர்ப்பாளர்கள் மீது முபாரக் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் பான் கி மூன் கண்டித்துள்ளார். "இது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அவர் கூறினார்.

free counters