2011 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொகுதிப் பங்கீடு குறி்த்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி இடையே நேற்று முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றன. நீண்ட காலமாக தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வரும் பேராசிரியர் காதர் மெய்தீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யூ.எம்.எல்) மற்றும் தி.மு.க. இடையே தொகுதிப் பங்கீடு குறி்த்து நேற்று முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாயலத்தில் நடைபெற்றது.
அதுசமயம், ஐ.யூ.எம்.எல். கட்சியினர் தாங்கள் வெற்றி பெற சாதகமான தொகுதிகளின் பட்டியலை தி.மு.க.விடம் கொடுத்து அவற்றில் கணிசமான தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் காதர் மொய்தீன், விரைவில் நாகூரில் நடைபெற உள்ள கட்சியின் கூட்டத்தில் எத்தனை தொகுதிகளை பெறுவது என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இப்பேச்சுவார்த்தையில் தி.மு.க. சார்பில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி ஆகியோரும், ஐ.யூ.எம்.எல். சார்பில் அதன் மாநிலத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம் முகமது அபுபக்கர் ஆகியோரும் பங்கேற்றனர்.