அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

18 மார்., 2011

இறங்கி வரும் அதிமுக..மதிமுகவுக்கு 16 தொகுதிகள்: ஏற்கிறார் வைகோ

Vaiko
சென்னை: அதிமுகவின் முடிவு தற்கொலைக்குச் சமமானது. இப்போது ஜெயிப்பதுதான் முக்கியம். கூட்டணிக் கட்சிகளை அப்புறம் பாத்துக்கலாம், என 'வேண்டப்பட்ட ஆலோசகர்கள்' கொடுத்த அவசர ஆலோசனை காரணமாக இறங்கி வர ஆரம்பித்துள்ளது அதிமுக தலைமை.


இதன் காரணமாக, அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 16 தொகுதிகள் ஒதுக்க இப்போது அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல்களை அதிமுக தரப்பே தர ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் 35 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலிலும் அதே அளவு தொகுதிகளை ஒதுக்காவிட்டாலும் 21 இடங்களுக்கு குறையாமல் தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மதிமுக நிர்வாகிகள் அதிமுகவிடம் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கம்யூனிஸ்டு கட்சிகள் தற்போது அதிமுக அணியில் உள்ளன. தேமுதிகவும், அதிமுக கூட்டணியில் சேர்ந்து 41 இடங்களை வாங்கிக் கொண்டது. எனவே, நீங்கள் கேட்கும் அளவுக்கு தொகுதிகளை ஒதுக்க முடியாது என்று அதிமுக தரப்பில் மதிமுக நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

மதிமுகவுக்கு 8 அல்லது 9 இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று அதிமுக நிர்வாகிகள் கூறியதால் மதிமுகவினர் கூட்டணியிலிருந்து விலக முடிவு செய்து, அமைதியுடன் நடப்பதை வேடிக்கைப் பார்த்தது. 

அதிமுக கூட்டணியில் தேமுதிக, கம்யூனிஸ்டுகள், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னணி கழகம், பார்வார்டு பிளாக், ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் மதிமுகவை எதிர்பார்க்காமலேயே 160 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கூட்டணி கட்சிகள் 3வது அணியை முயற்சியில் ஈடுபடப் போவதாக போக்குக் காட்டின. இதன் விளைவாக, மீண்டும் கூட்டணியை கட்டிக்காக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

மதிமுகவை சேர்க்கவேண்டும் என தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வற்புறுத்தி உள்ளன. அதுமட்டுமல்ல, மதிமுகவுக்கு கவுரவமான அளவு இடங்களை அதிமுக விட்டுத்தர வேண்டும் என்பது விஜயகாந்தின் முக்கிய நிபந்தனையாக உள்ளது.

இதனால் அதிமுக இறங்கி வந்து மதிமுகவை கூட்டணியில் சேர்க்க முன்வந்ததாகவும் மதிமுகவுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கி கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் அதிமுக தரப்பில் கூறத் தொடங்கியுள்ளனர்.

இன்னொரு பக்கம், வைகோவை சமாதானப்படுத்த அதிமுக நிர்வாகிகள் யாரையும் அனுப்பாமல், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், பொதுச் செயலாளர் இசக்கி முத்து ஆகிய இருவரையும் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

16 தொகுதிகளை வைகோ ஏற்றுக் கொள்வார் என்று தெரிவதால் இந்தக் கூட்டணி உறுதியாகவுள்ளது.
free counters