சென்னை: தற்கொலை செய்து கொண்ட ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா மூச்சு திணறி இறந்தார் என்று பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவர் டெக்கால் தெரிவித்துள்ளார்.
2ஜி விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 2ஜி விவகாரம் குறித்து அவரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லையா என்று அனைவரும் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் அவரது பிரதே பரிசேதனை முடிந்துள்ளது.
சாதிக் பாட்சா உடல் பிரேத பரிசோதனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடந்தது. பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் டெக்கால் நிருபர்களிடம் கூறியதாவது,
சாதிக் பாட்சாவின் உடலில் கழுத்து இறுக்கப்பட்ட அடையாளத்தை தவிர வேறு காயமே இல்லை. அவர் மூச்சு திணறி இறந்தது மட்டுமே உறுதியாகி உள்ளது.
அவர் தூக்கில் தொங்கினாரா, இல்லையா? என்பதை கழுத்து பகுதியில் உள்ள சதையை ஆய்வு செய்த பிறகு தான் தெரியும். அவரது கழுத்து சதை ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் 2 வாரங்களி்ல் தயாராகிவிடும் என்றார்.