அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதில் அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டிராமச்சந்திரன் கலந்து கொண்டார். பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில்,
இந்த நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டிருக்க வேண்டும். அவர் கலந்து கொள்வதாகத்தான் இருந்தது. அவர் கலந்து கொள்ள வேண்டும் என்று நாம் ஆசைப்படுவதைவிட, கலந்துகொள்ளவில்லை என்று திமுகவினர்தான் பெரிதாக ஊடகங்களில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஜெயலலிதாவையும், விஜயகாந்தையும் ஒருசேர காண வேண்டும் என்று ஆசைப்பட்டால், மே 15ஆம் தேதி வரை பொறுத்துக்கொள்ளுங்கள். ஆளுக்கட்சியின் முதல் அமைச்சராக ஜெயலலிதாவையும், பிரதான எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் ஆகிய இரண்டு பேரையும் மே 15ஆம் தேதி சட்டமன்றத்தில் பார்க்கலாம்.
இவர்கள் எதிர்பார்ப்பதைப்போல விஜயகாந்த் புறக்கணிக்கவில்லை. காரைக்கால், நாகை பகுதிகளில் வாக்கு சேகரிப்பதற்காக ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சி. அங்கே நிற்பவர்கள் தேமுதிகவினர் அல்ல. அதிமுக மற்றும் தோழமை கட்சியினர்தான் நிற்கிறார்கள். விஜயகாந்த் வருவார் என்று ஏராளமான ஏற்பாடுகள் செய்து கொண்டு காத்திருக்கின்ற நிகழ்ச்சி. அதை ரத்து செய்துவிட்டு வரவேண்டும் என்றால், அங்கிருந்து வருவதற்கு வெகுதூரம். ஆகவே இரண்டு முறை என்னிடம் அவர் பேசினார். தயவுசெய்து அம்மா அவர்களிடம் சொல்லுங்கள் நான் அங்கிருந்து வரமுடியாது என்றார். அதே நேரத்தில் அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்வதும் கடினமாக இருக்கிறது.
வேந்தன் ஒருவன் தன்னடைய பிறந்த நாள் விழாவை கொண்டாடினான். எல்லோரும் வந்தார்கள். ஆனால் வேந்தன் போகிற வழியிலே ஒரு விவசாயி மட்டும் தன்னுடைய நிலத்தை உழுதுகொண்டிருந்தான். அந்த அரசன் பார்த்து கேட்டான். என்னுடைய பிறந்த நாளுக்கு நீ வரமாட்டாயா என்று. உங்கள் பிறந்த நாளுக்கு வருவேன். அது எனக்கு ஒரு நாள் விருந்து. ஆனால் நான் இந்த நிலத்தை பயிரிட்டால்தானே நீங்கள் விருந்தே வைக்க முடியும் என்று சொன்னான். ஆகவே கடமையைச் செய்கிறவர்களைத்தான் அந்தக் காலத்திலேயே அரசர்கள் பாராட்டியிருக்கிறார்கள். அதே கடமையைச் செய்வதிலேதான் விஜயகாந்த் இன்று இருக்கிறார்.
அமைச்சர் பதவி வேண்டும் என்றோ, துணை முதல் அமைச்சர் பதவியோ வேண்டும் என்று கேட்கவில்லை. காரணம் என்னவென்றால் இந்த கூட்டணி அமைய வேண்டும். இந்த கூட்டணி அமையக் கூடாது என்பதற்காக நடந்த சதிகள், போட்ட திட்டங்கள் ஏராளம். திமுக அரசை அகற்ற என்றும் ஜெயலலிதாவுடன் என்றும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றார்.