"அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும்" என, மதுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார்.
மதுரை காளவாசல் சந்திப்பில் நடந்த பிரசார கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய போது, ஒரு குடும்பஆட்சியில் இருந்துத மிழகத்தை மீட்க சட்டசபை தேர்தல் மூலம் மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மின்வெட்டு, விலைவாசி உயர்வு, மணல் கொள்ளை, அரிசி கடத்தல், சுதந்திரமாக தொழில் செய்ய முடியாமை போன்றவை தலைவிரித்தாடும் நிலையில், தமிழகத்தை இந்ததேர்தலில் மீட்காவிட்டால், எப்போது என மனசாட்சி நம்மை கேட்கிறது.
ஸ்பெக்ட்ரம் மூலம் ஒரு லட்சத்து 76 ஆயிரம்கோடி ஊழல் புரிந்த கருணாநிதி குடும்பத்திற்கு தமிழகம் என்ன தண்டனை கொடுக்க போகிறது? பொருளாதார வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் முன்னோடியாக விளங்கிய தமிழகம், தி.மு.க.,வின் குடும்ப ஆட்சியில் பின்தங்கிவிட்டது. இலவச "டிவி' கொடுத்து, ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஆயிரம் ரூபாய் வருமானம் பெற்ற கருணாநிதியின் சூழ்ச்சியை விளக்க அத்திட்டம் போதும்.
மத்திய, மாநில ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கருணாநிதி குடும்பம் எந்தளவுக்கு சொத்து குவித்தது என்பதை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. அறிவிக்கப்பட்ட சொத்துக்களேஇப்படி என்றால், அவரது மகன்கள், மகள்கள்,பேரன்கள், பேத்திகள்,நண்பர்கள் திரட்டிய சொத்துக்களை பார்த்தால், உலகில் மிகப்பெரிய பணக்கார குடும்பம் என்பது தெரியும்.
தமிழகம் பின்தங்கியது ஏன்? சில ஆண்டுகளாக தமிழகம் ஒரு லட்சம் கோடி கடனில் தத்தளிப்பது புரிகிறதா? குஜராத், பீகார் மாநிலங்களை விட குறைந்த வளர்ச்சிக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. மக்கள் யாரும் உழைக்கவில்லையா? சிக்கனமாக வாழவில்லையா? பிறகு ஏன் தமிழகம் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது. தன் குடும்பவளர்ச்சியை மட்டும் குறிக்கோளாக கொண்டு, கருணாநிதி திட்டங்கள் தீட்டியதே காரணம்.
தலைமுறையாக பாடுபடுவோர் குடும்பம் கஷ்டப்படும் போது, ஒரே தலைமுறை "குபேர வாழ்க்கை' வாழ்கிறது. இத்தகைய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க, இத்தேர்தல் ஒரு வாய்ப்பு. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு கருணாநிதி குடும்பம் சாதனைபடைத்துள்ளது.
இத்தேர்தலில் தி.மு.க.டெபாசிட் இழந்தது என்ற சாதனை படைக்க செய்வீர்களா?சாதாரண மனிதர் உயிருக்கு பாதுகாப்பு கேட்டால், பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. மு.க.அழகிரிக்கு எதற்கு பாதுகாப்பு? மக்களால் அவருக்கு அச்சுறுத்தல் இல்லை. எதற்காகவும் தன் கொள்கையை விட்டு கொடுக்க மாட்டேன், என கருணாநிதி கூறுகிறார். அவருக்கு என்ன கொள்கை, லட்சியம் உள்ளது? அவருடைய கொள்கையை பரப்பியவர் டில்லி திகார் சிறையில் உள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும். போலீசாருக்கு முழு சுதந்திரம் தரப்படும். மதுரையில் ரவுடிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவர். ரவுடிகளின் புகலிடமாக திகழும் மதுரை, ஆன்மிக சுற்றுலா தலமாக்கப்படும். போலி ஆவணங்கள் மூலம் ரவுடிகளால் பறிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க "பறக்கும் பாலம்' அமைக்கப்படும். மதுரையை சுற்றி தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படும். குடிநீர் வசதி செய்யப்படும்.தி.மு.க., ஆட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அரசு ஊழியர்களுக்கு சம்பள முரண்பாடுகளையப்படும். ஒரு குடும்ப பிடியில் உள்ள தமிழகத்தை மீட்டெடுக்க அ.தி.மு.க., கூட்டணிக்கு ஒட்டளியுங்கள்.இவ்வாறு பேசினார்.